ருளைக் கண்டு மிகவும் அச்சமாக உணர்ந்த அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் தனது பல கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மின்சார விளக்கையும் கண்டுபிடித்தார். அதன்பிறகான நாட்களில் விளக்கின் உதவியில்லாமல் எந்தவொரு நாடும் இருளில் இருப்பதாக சரித்திரமே இல்லை.

இரவு நேரத்திலும்கூட மனிதன் மங்கலான விளக்கொளியில்தான் கண்ணயர்ந்து உறங்குகிறான். வட அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமான ஃப்ளாக் ஸ்டாஃப் (Flagstaff)  இல் வாழும் மக்கள் இப்படியான எண்ணத்திலிருந்து வேறுபட்டு செயற்கையாக உமிழும் ஒளிக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். நகரம் முழுவதும் தேடினாலும் வெள்ளை நிற மின்சார ஒளியை எங்குமே காண இயலவில்லை. எல்லா இடங்களிலும் ஆம்பர் நிறம் (amber colour) என்று சொல்லக்கூடிய மங்கலான மஞ்சள் நிற மின்விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டிருந்தன. மின்கம்பங்கள் யாவும் மிகவும் தாழ்வாக அமைந்து மேற்புறம் நோக்கிப் பயணிக்கின்ற ஒளிக் கதிர்களை தடுப்பான்கள் கொண்டு தடுத்திருந்தார்கள். வீட்டிற்கு முன்புறம் எரிகின்ற இவ்விளக்குகள் ஒரு மெழுகுவர்த்தி கொடுக்கும் வெளிச்சத்தை மட்டுமே கொடுக்கின்றன. இருளை அவ்வளவு முக்கியமானதாக அவர்கள் கருதுகிறார்கள். 

விலங்கினங்களின் தலைமுறை கடந்த வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் இரவு நேரக் கூடலை தடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஊரே ஓசையற்று அமைதியாக இருக்கிறது. வெளிச்சத்தை ஏற்படுத்தி இரவு நேர இயக்கத்தை தடுக்கின்ற எந்தவொரு செயலையும் இங்குள்ள மக்கள் மேற்கொள்வதில்லை. மாலை நேரத்தில் வீடடைந்த பின்பு வாசல் கதவை அடைத்துக் கொண்டவர்கள், வெளியே எரியும் விளக்கொளியையும் அணைத்துவிடுகிறார்கள். 

Advertisment

இருண்ட வானில் பிரபஞ்சத்தின் பேரியக்கத்தைக் கண்டு ஆராயும் தொலைநோக்கி அமைந்துள்ள லோவல் வானாய்வகம்  (Lowell observatory) இங்கு இருப்பதால் இந்த இரவு நேரத்தைக் கவனிக்க இவ்விடம் வந்து சேர்ந்தோம். 

குளிரூட்டிக்குப் பதிலாக உஷ்ணத்தைக் கொடுக்கும்படி எங்களது வாகனத்தை இயக்கும் நிலையில், புற வெப்பநிலை 0*க்கும் கீழாக நிலவி, அன்றைய புற வெப்பநிலையில் அவ்விடத்தின் இரவு நேரம் உறைந்திருந்தது. புறவெளிக்கு வந்தவுடன் நடுங்கும் குளிரை எதிர்கொண்டவாறே லோவல் வானாய்வகத்திற்குள்  (Lowell observatory) நுழைந்தோம். 

அங்குள்ள கட்டிடங்களுக்குள் அவர்கள் வெப்பநிலையை கட்டுப்படுத்தி வைத்திருந்தா லும் வெட்டவெளியில் முழு பிரபஞ்சத்தையும் ஆராய்கின்ற மூன்று தொலைநோக்கிகள் அமைந்திருந்த இடம் 3* வெப்பநிலையில் இருந்தது. அதற்கேற்ற ஆடை ஆயத்தங்களுடன் நாங்கள் வந்திருந்தாலும் வாழ்க்கையில் முதன்முதலாக சந்திக்கின்ற இந்த வெப்பநிலை, யாவற்றையும் மீறி உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக இருந்த இந்த இரவு நேரத்தில் கிட்டத்தட்ட 40 பேருக்கும் மேலாக மக்கள் இங்கு கூடியிருந்தார்கள். அவர்களில் சிறுவர் சிறுமிகளும் அடங்குவார்கள். 

Advertisment

இங்கு பணிபுரிகின்ற வழிகாட்டி ஒருவர் முன்பே திட்டமிட்டிருந்தபடி குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் முன் தோன்றி உரையாற்ற ஆரம்பித்தார். அவரது கையில் சக்திமிகுந்த லேசர் ஒளி விளக்கு இருந்தது. வானத்தையே கரும்பலகையாகக் கொண்டு, அங்கு ஏற்கனவே வரைந்திருப்பதை தன் கையிலிருந்த லேசர் ஒளிக்கற்றைகளை கோலாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி எங்களுக்கு விளக்கமளித்தார். வித்தியாசமான வகுப்பறையாக அந்த வெட்டவெளி எங்களுக்குத் தோன்றியது. லேசர் ஒளிக்கற்றைகள் நெடுந்தொலைவு பயணம் செய்பவை என்பதால், விண்ணில் செல்லும் விமானத்தின் மீது நாங்கள் பாய்ச்சுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் 420 கிலோமீட்டர் உயரத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகின்ற பன்னாட்டு விண்வெளி நிலையத்தில்  (International space station# ISS)  பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகளில் கதிரவனின் சூரியனின் ஒளிக் கற்றைகள் பட்டுத்தெறிப்பதால், காண்பதற்கு சிறிய கோள் ஒன்று நகர்ந்து செல்வதைப் போல அப்பொழுது ஐ.எஸ்.எஸ். (ஒநந) விண்ணில் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் மீதும் அவர்கள் ஒளியைப் பாய்ச்சி அங்கு பணிபுரிபவர்களை தொந்தரவு செய்வதில்லை என்பதை அவர் கூறக் கேட்டபோது இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு சுருங்கியிருக்கிறதென்று வியந்தோம். (இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் காந்தியடிகளின்“சத்திய சோதனை’ எனும் சுயசரிதை நூலோடு பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் சிறு பழுதின் காரணமாக அவருக்குக் கொடுக்கப்பட்ட காலத்தையும் கடந்து தங்கியிருந்தது நினைவில் வந்துசென்றது (அதன்பிறகான சில நாட்களில் அவர் பத்திரமாக தரையிறங்கிய செய்தியும் வந்தடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.). அதன்பிறகான செய்திகளில் அவர் பத்திரமாக புவியை வந்தடைந்ததை அறிந்து கொண்டது நிம்மதியைக் கொடுத்தது.)

பால்வெளி என்று சொல்லப்படுகின்ற மில்கி வே கேலக்ஸியில் (Milky way Galaxy)  நமது சூரியக் குடும்பம் இருந்தாலும் அகண்ட பெருவெளியில் அதனை முழுவதுமாகக் காணக்கூடிய இடத்தில் நாம் இல்லை. புவியிலிருந்து காணும்பொழுது அதன் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் கண்டுகொண்டிருக்கிறோம். அன்றைய இரவு வானின் காட்சிகளாக இருந்த நட்சத்திரக் கூட்டங்களை லேசர் ஒளி விளக்கைக் கொண்டு சுட்டிக்காட்டி, கிரேக்கர்களின் கற்பனையில் சூட்டப்பட்ட அவற்றின் பெயர்களையும் அதன் வடிவங்களை மையமாக வைத்து புனைந்த புகழ்பெற்ற கதைகளையும் எங்களுக்கு அங்கிருந்த வழிகாட்டி கூறினார். அதில் கரடிகளும் மீன்களும் அம்பினை ஏந்திய வில்லுமென இன்னும் பல உருவங்களையும் வடிவங்களையும் நட்சத்திரக் கூட்டங்களில் காண நேர்ந்தது.

பொதுமக்கள் யாவரும் பயன்படுத்துகின்ற இணையதளம் வருவதற்கு முன்பே, ஒரு இருப்பிடத்தை கருவி மூலம் கண்டுபிடித்து துப்புத் துலங்க ஜி.பி.எஸ். என்று சொல்லப்படுகின்ற (GPS# global positioning system) தொழில்நுட்பத்தை, அமெரிக்க ராணுவத்தினர் உலகப் போரின்போது முதன்முதலாக பயன்படுத்தினார்கள். அதன் கூட்டமைப்பில் 25 செயற்கைக்கோள்கள் சமமான இடைவெளியில் அமைந்து இணைந்து பணிபுரிகின்றன. ஒவ்வொரு செயற்கைக் கோளிலும் ஒரு கணினி, ஒரு வானொலி மற்றும் ஒரு அணுக் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 19,300 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இவை பூமியை மணிக்கு 11,200 கிமீ வேகத்தில் (ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு முறை) சுற்றிவருகின்றன. மூன்று அல்லது நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்து ஓர் இடத்தை சுட்டிக்காட்டி அதனை உறுதிசெய்கின்றன. 

நமது பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கின்ற இந்த ஜிபிஎஸ் (GPS # global positioning system) தொழில்நுட்பமானது, இணையதளம் வருவதற்குமுன்பே அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் விலை உயர்ந்த கார்களில் பயன் படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாடும் தங்களுக்கான சொந்த வழிகாட்டியாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இணைந்து ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியிருக்கின்றன என்றாலும் இலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்  (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் (ள்ற்ஹழ்ப்ண்ய்ந் ள்ஹற்ங்ப்ப்ண்ற்ங்) வரிசையாகப் பயணிப்பதை இரவு நேர தெளிவான வானில் இங்கு சாதாரணக் கண்களால் காணநேர்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துகின்ற இணையதள வசதியை இதிலிருந்து பெறுகின்றன. விண்ணை அண்ணாந்து பார்க்கும் பொழுது இத்தனை தகவல்களும் நினைவிற்கு வருகின்றன. 

அந்த இரவு நேரத்தில் வெட்டவெளியிலிருந்த மூன்று தொலைநோக்கிகளும், அன்றைய தினத்தில் சிறப்பானதாக விண்ணில் தெரிகின்ற காட்சிகளை நோக்கித் திருப்பப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பால்வெளி என்று சொல்லப்படுகின்ற மில்கி வே கேலக்ஸி(Milky Way Galaxy)யின் அருகிலிருப்பது ஆண்ட்ரோமெடா கேலக்ஸி (Andromeda galaxy)  ஆகும். அன்றைய இரவில் பெயர் சூட்டப்படாமல் எண்களால் குறிப்பிடப்பட்ட ங41, ங42 எனும் இரண்டு கேலக்ஸிகள் நட்சத்திரக் கூட்டங்களாக தென் பட்டதை ஒரு தொலைநோக்கியின் வழியாகக் கண்டோம். இறந்துபோன நட்சத்திரத்தை இரண்டாவது தொலைநோக்கியில் பார்த்தபோது, தெறித்துச் சிதறிய உப்புத் துகள்களைப் போல இருந்தது. மூன்றாவது தொலைநோக்கியிலும் வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருந்தும் காணமுடியாதபடி ஆனது.  நடுங்கிய குளிரில் தொடர்ந்து வெட்டவெளியில் நிற்பது சிரமமாக இருந்ததால் தவிர்த்துவிட்டோம்.

ஒரு குறுகிய பாதையின் இருபுறமும் ரேடியக்கதிர்கள் உமிழ்ந்த ஒளியில் அடையாளம் காண முடிந்த அதன் வழியே அருகிலிருந்த அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த விஞ்ஞானி ஒருவர் சிறுவர் சிறுமிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். வெப்பமூட்டப்பட்ட அறையாக அவ்விடம் இருந்ததால், குளிரிலிருந்து தற்காலிக மாக விடுதலை பெற்றோம். விண்ணுலகம் பற்றி அறிந்துகொள்வதற்கான கல்வி நிலையமாகவும் இவ்விடம் திகழ்வதால் இங்குள்ள சிறுவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக இந்த லோவல் வானாய்வகம் (lowell observatory) அமைந்திருக்கிறது. புளூட்டோவிற்குப் பெயர் வைத்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமியின் புகைப்படமும் அதுகுறித்த தகவல்களும் அந்த அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. செயற்கை ஒளியால் இரவின் இயற்கையை மாற்றாமல் ஒளி மாசைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தையும் அங்கு அறிவித்திருந்தார்கள். அறைக்குளிருந்த நட்சத்திரங்களாகத் தெரிந்த அச்சிறுவர்களது கேள்விகளும் அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியின் பொறுப்பும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பாதையை நோக்கி நகருகின்ற முயற்சியில் ஒன்றாகத் தோன்றியது.  

மற்றுமொரு அறையில் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த 242.6 கிலோ (535 பவுண்ட்) எடை கொண்ட விண்கல்லினை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணிலிருந்து கீழேயுள்ள புவியில் விழுந்து அங்கு பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லின் ஒரு சிறிய துகளாகும். இதில் 92% இரும்பு, 8% நிக்கல், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைரத்தின் தடயங்கள் இருக்கின்றன. இப்படியானதொரு தனிமங்களின் கலவையை புவி மண்ணின் எந்தவொரு பகுதியிலும் கண்டெடுக்கமுடியாது. விண்ணில் இப்படியான எரிகற்கள் நிறைய இருக்கின்றன என்றாலும், அவ்வப்பொழுது அவை பூமியை நோக்கி விழும்பொழுது உராய்வில் எரிந்து முற்றிலும் ஆவியாகிவிடுகின்றன. அவற்றையும் மீறி புவியில் விழுகின்ற ஒரு சில விண்கற்கள் அரிதானவை. மீட்டியர் கிரேட்டர் (meteor crater) என்று சொல்லப்படுகின்ற விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் அங்கிருந்து சுமார் 45 மைல்கள் தொலைவில் இருக்கிறது. 

50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய 150 அடி அகலமும், பல லட்சம் டன் எடையும் கொண்ட ஒரு பெரிய ட்ரான்-நிக்கல் விண்கல் ஒன்று, அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃப்பின் (Flagstaff ) ஒரு பகுதியை அணுகுண்டை விட 150 மடங்கு அதிக சக்தியுடன் தாக்கியது! இந்தத் தாக்கத்தின் விளைவாக பல மைல்களுக்கு பேரழிவு ஏற்பட்டது. மேலும் 550 அடி ஆழமும் கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமும் கொண்ட விண்கல் பள்ளம் (meteor crater)  என்று நாம் அழைக்கும் மாபெரும் கிண்ண வடிவக் குழியையும் உருவாக்கியது. விண்கல் விழும் பொழுதே எரிந்து கரைந்ததுபோக மீதம் பட்டுத்தெறித்த விண்கல்லின் சிறு சிறு துண்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு துண்டுதான் இங்கே  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புளூட்டோவைக் கண்டுபிடித்த மிகப்பெரிய தொலைநோக்கியும், ஒரு அறை முழுவதும் நிரம்பியபடி பிரம்மாண்டமாக வானை நோக்கி நின்றிருந்ததை நாங்களும் கண்டு வியந்தோம்.

சிறுவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கின்ற விண்வெளி தொடர்பான விற்பனைப் பொருள்களோடு, ஈர்ப்பு விசையற்ற விண்ணின் ஆய்வு மையங்களில் பயன்படுகின்ற எழுதுகோல் ஒன்றும் 20 டாலர் மதிப்பில் விற்பனைக்கு இருந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு,  பேனாவின் மை கீழே இறங்காத புவி ஈர்ப்பு விசையற்ற விண்வெளியில் எப்படி எழுதுவது என்கிற ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகள் பங்கு கொண்டபோது, அதனை மிக எளிதாகக் கையாண்டு கார்பைட்டாலான பென்சிலில் எழுதிக் கொள்ளலாமென பதிலளித்த ரஷ்ய நாடு இப்பொழுது நினைவிற்கு வந்தது. ஆராய்ச்சி நின்றுவிடாமல் தொடர்ந்து நடந்திருக்கிறது என்பதை இங்கு விற்பனையாகும் எழுதுகோல் அறிவித்தது.

(தொடரும்)